டெல்லியில் நடுரோட்டில் வைத்து போலீஸ் கான்ஸ்டபிளையே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷாம்பு தயாள் டெல்லி காவல்துறையில் போலீஸ் கன்ஸ்டபிளாகப் பணிபுரிகிறார். ஷாம்பு பணிபுரியும் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவரின் செல்போனை ஒருவர் பறித்துச் சென்றது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் குற்றவாளியைக் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட திருடனை காவலர் ஷாம்பு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில், ஷாம்புவை அந்தத் திருடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 12 முறை வயிற்றில் குத்திவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினான். அங்கிருந்த பொதுமக்களுடன் சேர்ந்து மற்றொரு காவலர் திருடனை விரட்டிப் பிடித்து மறுபடியும் கைது செய்தார். பட்டப்பகலில் மக்கள் அதிகளவில் புழங்கும் சாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஷாம்புவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் ஷாம்பு தயாள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 57 வயதான ஷாம்பு தயாளுக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிரிழந்த ஷாம்பு தயாளுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.