கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமச்சேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமசேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் குண்டுவெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சரணடைந்த கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கண்ணூர் பகுதியிலும் ஒருவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நெல்லையில் தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் விடுதிகளில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் யாரேனும் தங்கியிருந்தார்களா என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.