வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பாஜக எம்.பி ஹேமமாலினியை பஞ்சாப் வந்து இந்த சட்டங்கள் குறித்து விளக்கம் கொடுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக எம்.பி. ஹேமமாலினி விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்திருந்தார். "அவர்களுக்கு என்னதான் வேண்டும் எனத் தெரியவில்லை. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் போராடுகின்றனர். எதிர்க் கட்சிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இப்படி செயல்படுவதைப் போலத் தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஹேமமாலினி பஞ்சாப் வந்து இந்த சட்டங்கள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காந்தி கிசான் சங்கர்ஷ் விவசாய குழு ஹேமமாலினிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்தப் போராட்டத்தில் ஏற்கனவே 100 பேர் உயிரிழந்துள்ள சூழலில், விவசாயிகளால் சட்டங்களைப் புரிந்துகொள்ள முடியாது என்று நீங்கள் கூறியது வேதனையாக இருந்தது. நாங்கள் உங்களைப் பஞ்சாப்புக்கு அழைக்க விரும்புகிறோம். விவசாயிகளால் புரிந்துகொள்ள முடியாதது என நீங்கள் கூறும் இந்தச் சட்டங்களைப் பற்றி எங்களுக்கு நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும். எங்கள் நிலைக்கு ஏற்ப ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நீங்கள் தங்குவதற்கும், போக்குவரத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்வோம். விவசாயிகளும் தொழிலாளர்களும் இதற்கான பணத்தைச் செலுத்துவார்கள். உங்களது விளக்கம், டெல்லியில் கடும் குளிரில் போராடி விவசாயிகள் உயிரை விடுவதைத் தடுத்து நிறுத்தலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.