கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இரு கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.
அதே சமயத்தில் பாஜகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். அதில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவுதி உள்ளிட்டோரும் அடங்குவார்கள். இந்த நிலையில் கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரான ஈஸ்வரப்பாவிற்கும் அவரது மகன் காந்தேஷுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் இல்லை என்று பாஜக தலைமை கூறிவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஈஸ்வரப்பா தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். இது ஒரு புறமிருக்க பலரும் மற்ற தலைவர்களைப் போலவே காங்கிரஸ் இணைந்து விடுவார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிருப்தியில் இருந்த ஈஸ்வரப்பாவை பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் அழைத்து, “கர்நாடக மாநிலத்தில் பாஜகவை வளர்க்க நீங்கள் செய்த தியாகத்தை பெரிதும் மதிக்கிறேன். தலைமையின் முடிவை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர தேர்தல் பணியில் நீங்கள் ஈடுபடவேண்டும். பிரச்சாரத்திற்காக கர்நாடக வரும்போது உங்களை சந்திக்கிறேன்” என்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் பிரதமருடன் பேசிய ஆடியோவை ஈஸ்வரப்பா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.