இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தையும் தொடர்ந்து முடக்கிவருகின்றனர்.
இந்தநிலையில், இன்று (03.08.2021) ராகுல் காந்தி தலைமையில், மக்களைவை மற்றும் மாநிலங்களவை அவைத்தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் சைக்கிளில் சென்றனர்.
இதற்கிடையே இன்று பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி எம்.பிக்களால் வழக்கம் போல் இடையூறு ஏற்பட்டாலும், நிதானமாக இருக்கும்படி பாஜக எம்.பிக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் கண்ணியம் காக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என கூறிய பிரதமர் மோடி, "நாடாளுமன்ற நடவடிக்கைகளை இடையூறு செய்வது நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும், நாட்டு மக்களையும் அவமதிப்பதாகும்" எனவும் எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளார்.