உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (30-12-23) அயோத்தி பகுதிக்கு சென்றார். அங்கு சென்ற அவர், அயோத்தி விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வரும் 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த உலகமே காத்திருக்கிறது. பாரம்பரியம், வளர்ச்சியின் வலிமை இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லும்.
ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக அனைவரும் பங்கேற்க வேண்டும் என அனைவருக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வர இயலாது என்பது உங்களுக்கு தெரியும். அதனால், ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சி முறையாக நடந்து முடிந்தவுடன், அவர்களின் வசதிகேற்ப அயோத்திக்கு வரவேண்டும் என்று ராம பக்தர்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதனால், இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்தவுடன், லட்சக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வருவார்கள். ஜனவரி 22 ஆம் தேதியோ அல்லது வேறு ஒரு நாளிலோ மக்கள் வரலாம். ஏன், 10 வருடங்கள் கழித்துக் கூட அயோத்திக்கு மக்கள் வரலாம். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வந்தாலும், அயோத்தியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.