புதுச்சேரி மாநிலத்தில் கரோனா ஊரடங்கை முன்னிட்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மற்றும் கள், சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மூன்றாவது ஊரடங்கு முடிந்த பிறகு தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதையடுத்து புதுச்சேரிவாசிகள் அம்மாநிலத்தின் அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களான தமிழக பகுதிகளில் மதுனபாங்களைத் திருட்டுத்தனமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் கரோனா தொற்று பரவிவிடும் என இரு மாநிலங்களிலும் அச்சம் நிலவியது. மேலும் புதுச்சேரியின் வருவாய் பாதிக்கப்பட்டதோடு மதுக்கடை உரிமையாளர்களும் மதுக்கடைகள் திறக்க கோரிக்கைகள் விடுத்தனர்.
அதையடுத்து மதுக்கடை திறப்பது சம்பந்தமாக மாநில அமைச்சரவைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இது சம்பந்தமாக கவர்னருக்கு கோப்புகளை அனுப்பினார்கள். ஆனால் கவர்னர் கிரண்பேடி ஊரடங்கு காலத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 102 மதுக்கடைகளைத் திறப்பது சம்பந்தமாக சி.பி.ஐ. வழக்கு நிலுவையில் இருப்பதால் திறக்க முடியாது என்றும், கலால் வரி உயர்த்த வேண்டும், கரோனா வரி விதிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் புதுச்சேரி மாநில வருவாயைப் பெருக்க தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். அப்போதுதான் புதுச்சேரிக்கு வருவாய் நேரடியாக அரசுக்கு வரும் என்று அழுத்தம் கொடுத்தார்.
இவைகளை அமைச்சரவை ஏற்காததால் கையெழுத்திட வேண்டிய கோப்பில் கையெழுத்திடாமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனிடையே கரோனா வரி விதிககும் கவர்னரின் ஆலோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு நேற்று (23.5.2020.) இரவு மதுக்கடைகளைத் திறப்பது சம்பந்தமான கோப்பில் கவர்னர் கிரண்பேடி கையெழுத்திட்டார். அதையடுத்து புதுச்சேரியில் மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய பின்பு அமைச்சர் நமச்சிவாயம் இதனை அறித்தார். அதேசமயம், “காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும், மது வாங்க வருவோர் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மதுக்கடைகளில் மது அருந்த அனுமதி இல்லை. மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட கரோனா வரி மூன்று மாதங்கள் அமலில் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.
மதுபானங்கள் மீது கரோனா வரி விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டு விலைகளை போலவே புதுச்சேரி மதுபாங்களின் விலைகளும் முன்பை விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.