இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வந்தனர்.
அதே சமயம் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாடகள் ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்து பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டது. மேலும் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு உறக்க நிலைக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் செப்டம்பர் 22 ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் செயல்பாடு குறித்து இஸ்ரோ தெரிவிக்கையில், “ஸ்லீப் முறையில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. ஸ்லீப் முறையில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை இயக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.