மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த தயார் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்தநிலையில், 100வது உழவர் ரயில் (கிசான் ரயில்) சேவையை இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி. மகாராஷ்டிராவில் சங்கோலா மற்றும் மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையே இந்த நூறாவது உழவர் ரயில் இயங்கவுள்ளது
விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும் இந்த உழவர் ரயில் சேவை, முதன்முதலில் மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகார் மாநிலத்தின் தனபூர் இடையே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இதனை தொடங்கி வைத்தார். அதன் பிறகு படிப்படியாக இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு இன்று நூறாவது உழவர் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.