பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் முதல் வாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளுவார் எனவும், அந்த பயணத்தின்போது ஆக்சிஜன் ஆலையை தொடங்கி வைக்கவுள்ளதாகவும், விமான நிலையம் மற்றும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் ஆகியவை சம்மந்தப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் பிரதமர் மோடி நாளை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லவுள்ளதை உறுதி செய்துள்ள பிரதமர் அலுவலகம், நாளை ரிஷிகேஷ் எய்ம்ஸில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிஎம் கேர்ஸ் மூலம் இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார் எனவும் கூறியுள்ளது.
மேலும் இந்த 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுவதன் மூலம், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்படும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், இதுவரை 1,224 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் நிதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 1,100 க்கும் மேற்பட்ட ஆலைகளில் நாளொன்றுக்கு 1,750 எம்.டி ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.