புத்தமதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரின் பிறந்தநாளன இன்று, (26.05.2021) உலகமெங்கும் வாழும் புத்த மதத்தைச் சார்ந்தவர்களால் புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், கரோனாவால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசியது வருமாறு;-
ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காக, தன்னலமின்றி தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கொண்டிருக்கும் நமது முன்கள சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்துகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா தொற்றுநோயைப் பற்றி இப்போது நமக்கு நல்ல புரிதல் உள்ளது. இது போராடுவதற்கான நமது யுக்தியைப் பலப்படுத்துகிறது. உயிரைக் காப்பாற்றுவதற்கும், தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் முக்கியமானதான தடுப்பூசி நம்மிடம் உள்ளது. கரோனா தடுப்பூசிகளில் பணியாற்றிய நமது விஞ்ஞானிகள் பற்றி இந்தியா பெருமிதம்கொள்கிறது.
கடந்த ஆண்டில், பல தனிநபர்களும் அமைப்புகளும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப முன்வந்து துயரத்தைக் குறைக்க, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததைப் பார்த்தோம். உலகெங்கிலும் உள்ள புத்த அமைப்புகள் மற்றும் புத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களில் பெருந்தன்மையான பங்களிப்பை வழங்கினார்கள்.
கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக அனைத்தையும் செய்யும்போது, மனிதகுலம் எதிர்கொள்ளும் மற்ற சவால்கள் மீதான பார்வையை இழக்கக்கூடாது. மனிதத்திற்கு எதிரான சவால்களில் ஒன்று காலநிலை மாற்றம். வானிலை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பனிப்பாறைகள் உருகுகின்றன. ஆறுகளும் காடுகளும் ஆபத்தில் உள்ளன. நம் கிரகம் காயத்தோடு இருக்க நாம் அனுமதிக்க முடியாது. பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றும் பாதையில் உள்ள, வேறு சில பெரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. நிலையான வாழ்க்கை என்பது சரியான வார்த்தைகள் பற்றியது மட்டுமல்ல; சரியான செயல்களைப் பற்றியது.
புத்தரின் வாழ்க்கை அமைதி, நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்வது பற்றியது. வெறுப்பு, பயங்கரவாதம் மற்றும் இரக்கமில்லா வன்முறை ஆகியவற்றை சார்ந்தே தனது இருப்பை கொண்டிருக்கும் சக்திகள் இன்றும் உள்ளன. இத்தகைய சக்திகள் தாராளமய ஜனநாயகக் கொள்கைகளை நம்பவில்லை. மனிதத்தை நம்புபவர்கள் ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.