புதுவை காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணராவ், அமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகினார். ஆந்திர மாநிலத்தில் புதுச்சேரிக்கு சொந்தமான ஏனாம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
ஆந்திரா மாநிலத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் மீனவர் சமூகம் பெரும்பான்மையாக இருக்கிறது. மீனவர்கள் அடர்த்தியாக உள்ள இந்த 7 தொகுதிகளிலிம் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவரான மல்லாடி கிருஷ்ணராவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.
அவரை தனது கட்சியில் இணைத்துக்கொள்ள விரும்பி, சமீபத்தில் அவரை ஹைதராபாத்துக்கு அழைத்திருந்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அதன்பேரில் ஜெகனை சந்தித்தார் மல்லாடி. அப்போது, ’’உங்களைப் போன்ற அனுபவ தலைவர்களும், ஆந்திராவில் செல்வாக்குமிக்கவருமான நீங்கள் ஆந்திர அரசியலில் இருக்க வேண்டும். ஒய்.யெஸ்.ஆர்.காங்கிரசுக்கு நீங்கள் வந்தால் ரொம்பவும் மகிழ்வேன்’’ என சொல்லியுள்ளார் முதல்வர் ஜெகன் மோகன். இதனை ஆமோதித்த மல்லாடி கிருஷ்ணராவ், புதுச்சேரி அரசின் அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.
பதவி விலகுவதற்கு முன்பு, புதுவை முதல்வர் நாரயணசாமியிடம் இதுகுறித்து மல்லாடி தெரிவிக்க, அவரை சமாதானப்படுத்தியுள்ளார் நாரயணசாமி. ஆனால், அதனை மறுதலித்துவிட்டார். புதுவை அரசியலில் இருந்து விலகியிருக்கும் மல்லாடி கிருஷ்ணராவ், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணையவிருக்கிறார்.
தனது கட்சியில் இணையும் அவரை, ராஜ்யசபா எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்ப உத்தேசித்துள்ளாராம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! புதுச்சேரி அரசியலில் இருக்கும் வரை, எம்.பி. வாய்ப்பு எப்போதுமே தமக்கு கிடைக்காது என்பதாலேயே ஆந்திர அரசியலுக்குள் நுழைய முடிவுசெய்து ஜெகனின் அழைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார் மல்லாடி கிருஷ்ணராவ் என்கிறார்கள் புதுவை காங்கிரஸார்.