தமிழர் மரணம்.. மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன்!
சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த முருகனின் உறவினர்களிடம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்பு கோரியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகில் உள்ள துரை குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பால் கறவைத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் பயணித்த முருகன் சாலை விபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
4 தனியார் மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவமனை உட்பட, மொத்தம் 5 மருத்துவமனைகளில் பல்வேறு காரணங்களைச் சொல்லி, முருகனுக்கு மருத்துவமனை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இதனால், முருகன் சிகிச்சைப் பலனின்றி ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைகள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படும் என கேரள சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், சிகிச்சை மறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த முருகனின் குடும்பாத்தாரிடம் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து கேரள மாநில முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ‘மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்