கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் எட்டாவது நாளாக இன்றும் (06.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 400-க்கும் மேல் அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 2000 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலம்பூர் மற்றும் சாலியாறு பகுதிகளில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அழுகிய நிலையில் மீட்கப்படும் சடலங்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவு அபாயம் நிறைந்த வயநாட்டு பகுதியில் சட்டவிரோதமாக கேரள அரசு குடியேற்றம் செய்ததாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் விமர்சனம் வைத்திருந்தார். இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்பொழுது கண்டனம் தெரிவித்துள்ளார்.
'இவ்வாறு பேசுவது நிலச்சரிவில் உயிரிழந்தோரை அவமதிக்கும் செயல்' என கண்டனம் தெரிவித்துள்ள பினராயி விஜயன், முண்டக்கை, சூரல்மாலாவில் பணியாற்றிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.