கேரளாவில் கனமழை கொட்டித்தீர்த்துவரும் நிலையில், மேலும் மழை வலுவடைய வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளாவின் மூணாறு. பெட்டிமுடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரைக் காணவில்லை எனத் தகவல் வெளியான நிலையில், நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக இன்று காலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிருடன் மீட்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மூணாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா முழுவதும் கனமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், அம்மாநிலத்தில் வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "கனமழையை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனமழை அதிகரித்துள்ளதால் நிலச்சரிவு, மண் சரிவு ஆகியவை ஏற்படும். உள்ளூர் அதிகாரிகள் தரும் அறிவுரைப்படி செயல்படுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.