கேரளாவில் ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மேலும் 14 பேருக்கு ஸிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் புதிதாக ஸிகா வைரஸ் எனும் புதிய வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே இந்த ஸிகா வைரஸானது குஜராத், மஹாராஷ்ட்ராவில் உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக - கேரள எல்லைப் பகுதியான குமரி மாவட்டம், பாரசாலை என்ற பகுதியில் 24 வயதான கர்ப்பிணிப் பெண்ணிற்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.
திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு காய்ச்சல் இருந்ததால் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, வைரஸ் காய்ச்சல் போன்றவை தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்தப் பரிசோதனைகளின் முடிவில் சிக்கன் குனியா போன்ற எந்தவித காய்ச்சலும் இல்லாததால் அந்தப் பெண்ணுக்கு ஸிகா வைரஸ் இருக்கலாம் என்பது தொடர்பான சோதனைகளை மேற்கொண்டு, இதற்காக அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கோயம்புத்தூர் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு ஸிகா வைரஸ் தொற்று உறுதியாகியது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி அந்தப் பெண்மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தையுடன் வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார். அந்தப் பெண் பிரசவ சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் ஒருமாத காலம் வாடகைக்குத் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கேரள சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் அந்தப் பெண்மணி தங்கியிருந்த பகுதியிலிருக்கும் மக்களிடம் மாதிரிகளை சேகரித்துவருகின்றனர்.
மேலும், யாருக்காவது இந்த வைரஸ் பரவியுள்ளதா என்பது குறித்து தெரிந்துகொள்ள ஆய்வுக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வைரஸானது கொசுக்கள் மூலம் பரவும் என கூறப்படுகிறது. தொடர்ந்து கேரளாவில் ஸிகா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். முதன்முதலாக கேரளாவில் ஸிகா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது. அதேபோல் சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 30 பேருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.