கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்கு அண்மைக்காலமாக தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள், தடுப்பூசியை நேரடியாக இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் அளித்திருந்தன. ஆனால், ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட அமெரிக்கத் தடுப்பூசி நிறுவனங்கள், மத்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்குவோம் என்றும், மாநிலங்களுக்கு நேரடியாகத் தடுப்பூசிகளை வழங்கமாட்டோம் என்றும் தெரிவித்துவிட்டன.
இதற்கிடையே மத்திய அரசும் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முயற்சித்து வந்தது. இது தொடர்பாக ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. இந்நிலையில், மாடர்னா நிறுவனம், இந்தாண்டு இந்தியாவிற்கு அளிக்க தங்களிடம் கூடுதல் தடுப்பூசிகள் இல்லையெனவும், அடுத்தாண்டு இந்தியாவில் ஒரு முறை செலுத்தக்கூடிய (சிங்கிள் டோஸ்) கரோனா தடுப்பூசியை தாங்கள் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மத்திய அரசு வட்டாரங்கள், "ஃபைசர் நிறுவனம் இந்தியாவிற்கு ஜூலையில் ஒரு கோடி தடுப்பூசிகள், ஆகஸ்ட்டில் ஒரு கோடி தடுப்பூசிகள், செப்டம்பரில் இரண்டு கோடி தடுப்பூசிகள், அக்டோபரில் ஒரு கோடி தடுப்பூசிகள் என இந்தாண்டே ஐந்து கோடி தடுப்பூசிகளைத் தரத் தயாராக இருக்கின்றது. ஆனால், அதனால் தங்களுக்கு ஏற்படும் இதர இழப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், இந்தியாவுக்கு தேவையான மருந்துக்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தி ஆர்டர் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மத்திய மருந்துகள் ஆய்வகத்தில் அவற்றின் தடுப்பூசிகளை பரிசோதிக்க தேவையானவற்றை செய்யவேண்டும், ஒப்புதலுக்குப் பிந்தைய சோதனைகளின் தேவைகளில் தளர்வு அளிக்கவேண்டும் எனவும் நிபந்தனைகளை விதிக்கிறது" எனக் கூறியுள்ளன.