இனி பக் வகை நாய்களை விளம்பரங்களுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று பீட்டா வோடபோன் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளது. இதில், அவை மற்ற நாய்கள்போல சாதாரண நாய்கள் இல்லை என்று கூறியுள்ளது.
வோடபோன் நிறுவனத்தின் சி.இ.ஓ சுனில் சூட்டிற்கு பீட்டா எழுதியுள்ள கடிதத்தில், பக் வகை நாய்கள் அழகுக்காக மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட நாய் இனமாகும். இவை மற்ற நாய்கள் போல் கிடையாது இவை மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்படும் தன்மைகொண்டது. சமீபத்தில் கூட உங்கள் நிறுவன விளம்பரத்தில் 30 பக் நாய்களை உபயோகித்துள்ளீர்கள். இந்த வகை நாய்களை இந்தியாவில் பிரபலமாக்கியது உங்களின் விளம்பர்கள்தான் அதற்கு நன்றி. இந்தியர்கள் இதை விரும்புவதற்கு ஒரு காரணம் அமுங்கிய நிலையில் உள்ள மூக்கு, இரண்டு பெரிய முட்டையான கண்கள், சுருங்கிய நிலையில் உள்ள தோல்கள் ஆகியவைதான். நீங்கள் பக் வகை நாய்களை மட்டும் அல்ல, வேறு எந்த விலங்குகளையும் விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டாம்.
ஏனென்றால் படப்பிடிப்பு தளங்களில், அங்குள்ள விளக்குகள், சத்தங்கள், போன்றவை விலங்குகளின் உடலிற்கு உகந்ததாக இருக்காது. மேலும் இந்தியாவின் தட்பவெப்ப நிலையினால் பக் இன நாய்களுக்கு பற்களில் ஏற்படும் நோய், முதுகு வலி, தோல் சம்பந்தமான நோய்கள், கண்களில் ஏற்படும் நோய்கள் என்று பல வித இன்னல்களுக்கு இந்த இன நாய்கள் ஆளாகின்றனர். அதனால் அவை இறக்கக்கூட நேரிடும். ஆகையால் பீட்டாவில் உள்ள பத்து லட்ச உறுப்பினர்களின் குரலாக இந்த கோரிக்கையை வைக்கின்றோம்.