வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரமடைந்து மாமல்லபுரம் அருகே 180 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்சேரிக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி அருகில் உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், அப்பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசு சரியாக மேற்கொள்ளாததால் வீடுகள் இடிந்து விழுந்ததாகக் குற்றஞ்சாட்டி பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த காலாப்பட்டு தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, கடலோர கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், "எங்களது பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைக்க வேண்டுமென அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை. அருகில் உள்ள தமிழகப் பகுதியில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்குள்ள மக்களைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு எதுவும் செய்யவில்லை" எனக் குற்றஞ்சாட்டினர்.