பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒருபுறம் வேட்பு மனுத்தாக்கல், மற்றொரு புறம் அரசியல் கட்சிகளின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் என்று களைக்கட்டியுள்ளது.
குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் தற்போது சுவாரஸ்ய விஷயம் ஒன்று நடந்துள்ளது. அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் களம் காணுகிறார் 94 வயதான பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்.
இதற்கு முன்பாக, 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் 92 வயதில் போட்டியிட்டது தான் இதுவரை அதிக வயதில் தேர்தல் களம் கண்டவர் என்ற சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்திருக்கிறார் பிரகாஷ் சிங் பாதல்.
கடந்த 1927- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8- ஆம் தேதி பிறந்த பாதல், நாடு சுதந்திரம் அடைந்து 1947- ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 1970- ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக முதன் முறையாக பொறுப்பேற்றபோது, மிக இளம் வயதில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
அதன்பிறகு, 1977, 1997, 2007, 2012 என ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பிரகாஷ் சிங் பாதல் பதவி வகித்துள்ளார். சுமார் 19 ஆண்டுகள் பஞ்சாப் மாநிலத்தை முதலமைச்சராக ஆட்சி செய்திருக்கிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 15 இடங்களில் மட்டுமே பிரகாஷ் சிங் பாதலின் சிரோன்மணி அகாலிதளம் வெற்றி பெற்றது.
அந்த தேர்தலில் புதிதாக களம் கண்ட ஆம் ஆத்மி கட்சியை விட குறைவான இடங்களிலே வெற்றி பெற்றதால், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்தது. மூன்று வேளாண் சட்ட விவகாரத்தில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்த பாதல், மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் பட்டத்தை விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்காக தூக்கி எறிந்தார்.
தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள தனது கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக தற்போது 6- வது முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார் பிரகாஷ் சிங் பாதல். 25 ஆண்டுகளாக தனக்கு தோல்வியையே தராத லம்பி சட்டமன்றத் தொகுதியில் பாதல் களம் காண்கிறார்.
94 வயதிலும், இளைஞர்களுக்கு சரிசமமாக தேர்தலைக் காணும் பாதலுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.