Skip to main content

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்; மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Parliamentary trespass incident; The mastermind was arrested

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின் அலுவல்கள் நேற்று முன் தினம் (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர்.   இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு உள்ளே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனோரஞ்சன் (34), சாகர் ஷர்மா (26) என்பதும் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று (14-12-23) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அந்த 4 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரினர். ஆனால், கைது செய்யப்பட்ட நால்வருக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு முன்னதாக, கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லலித் ஜா என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாகி இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் ஜாவை பிடிப்பதற்கு தொழில்நுட்ப உதவியுடன் டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று (14-12-23) லலித் ஜா தானாகவே டெல்லி காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். சரணடைந்த லலித் ஜாவை கைது செய்த காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்