
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று வழக்கத்திற்கு அதிகமாக பக்தர்கள் கூடினர்.
கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் 100 ரூபாய் கட்டண வரிசை மற்றும் இலவச தரிசனம் என சாமி தரிசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்தார். அப்போது நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்த அவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அருகில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓம்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.