நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் -17 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று குறைவான எம்.பிக்களே வருகை தந்தனர். இதில் குறிப்பாக பார்க்க வேண்டியது என்னவென்றால் ஆளுங்கட்சி உறுப்பினர்களே அவைக்கு வரவில்லை என்பது தான். பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருப்பதால், அவைக்கு பாஜக உறுப்பினர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று மாலை 05.45 மணிக்கு பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் ஒரு தனிநபர் தீர்மானம் தொடர்பாக தண்ணீர் பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் பக்வந்த்மான் அவையில் போதிய எம்.பி.க்கள் இல்லாதது பற்றி பேசினார். இதனை ஏற்று மாநிலங்களவையை நடத்தி வந்த ராஜேந்திர அகர்வால் அவை நடவடிக்கையை நிறுத்திவிட்டு எம்.பி.க்களை அழைக்க மணி அடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் மணி அடித்தும் சில எம்.பி.க்கள் மட்டுமே அவைக்குள் வந்தனர். இருப்பினும் அவையை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 55 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் அவையில் அந்த எண்ணிக்கை இல்லாத காரணத்தால், அவை நடவடிக்கை முடிவதற்கு மாலை 06.00 மணிக்கு முன்பே 5 நிமிடங்கள் அவை ஒத்திவைத்து ராஜேந்திர அகர்வால் உத்தரவிட்டார். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அவைகளில் எந்தவித செயல்பாடுகளும் நடைபெறாது. அதனால் திங்கள்கிழமை முதல் அவை வழக்கம் போல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.