ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கைலாஷ் மேக்வால் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வாலை 'ஊழல் நம்பர் 1' என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவருமானவர் கைலாஷ் மேக்வால். இவர் ஆகஸ்ட் மாதம், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வாலை 'ஊழல் நம்பர் 1' என்று விமர்சித்து, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதாகவும் கூறியிருந்தார். மேலும், “அர்ஜுன் மேக்வால் மீது பல ஊழல் வழக்குகள் இருக்கின்றன. தொடர்ந்து அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அனைவரிடமும் பணம் பெற்றார்” எனவும் கூறி வந்தார் கைலாஷ்.
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, இன்று (13-09-2023) மீண்டும் பாஜகவை விமர்சித்துள்ளார் கைலாஷ். அவர் பேசுகையில், “ராஜஸ்தான் பா.ஜ.கவில் கோஷ்டி பூசல் இருக்கிறது. மேலும், பா.ஜ.,வில் மேலிருந்து கீழ் வரை பிளவுகள் இருக்கின்றன. பின்னர், ராஜஸ்தான் முன்னாள் பாஜக தலைமை சதீஸ் பூனியா அவர்கள், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் இணைந்து செயல்படும் கட்சியினரை குறி வைக்கிறார்" எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில் இன்று, ராஜஸ்தான் பாஜக மாநிலத் தலைவர் சிபி ஜோஷி, கைலாஷ் மேக்வாலை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்தார். அதுகுறித்தான அறிக்கையில், ‘கைலாஷ் மேக்வால் வைத்த குற்றச்சாட்டிற்கு உரிய பதில் வழங்க வேண்டும் எனவும் பத்து நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இருந்தும் சஸ்பெண்டான கைலாஷ் மேக்வால், புதன்கிழமை ஜெய்ப்பூரில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில், ராஜஸ்தான் பாஜகவில் கோஷ்டி பூசல் இருப்பதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “நான் புறக்கணிக்கப்பட்டுள்ளேன். பின்னர், 'ஹீரோ'வில் இருந்து 'பூஜ்ஜியத்துக்கு' சென்றுவிட்டேன். நான் இனிமேல் பாஜகவின் பயணத்தில் இல்லை" எனவும் கூறினார்.
ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் பாஜக தரப்பு எம்.எல்.ஏ இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே, இது தேர்தலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனவும் சொல்லப்படுகிறது.