பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (14/09/2020) கூடுகிறது.
இந்த கூட்டத்தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (14/09/2020) முதல் அக்டோபர் 1- ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெற உள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க எம்.பி.க்கள் வருகையை மின்னணு முறையில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை நடந்தது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 'கிட்' வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு கிட்டிலும் முகக்கவசங்கள், 50 மில்லி சானிடைசர், கையுறைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
இதனிடையே, நீட் தேர்வு பிரச்சனை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் நாளை போராட்டம் நடத்துவார்கள் என்றும், நீட் தொடர்பாக போராட்டம் நடத்தக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என தி.மு.க.வின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.