ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தில் உள்ள ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு பேருந்து, ட்ரக் உட்பட நான்கு வாகனங்கள் மண்ணுக்கடியில் சிக்கியுள்ளன. இவ்வாறு சிக்கியுள்ள வாகனங்களில் 50 -60 பேர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில், இந்திய இராணுவம், இந்தோ-திபெத்திய காவல் படை, தேசிய பேரிடர் மீட்டுப்படை உள்ளிட்டவை மீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை சிக்கியுள்ள பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.உயரத்தில் இருந்து மண், கற்கள் உள்ளிட்டவை விழுவதால் மீட்புப்பணி சிக்கலாகியுள்ளது.
இதற்கிடையே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஹிமாச்சல பிரதேச முதல்வரிடம் நிலச்சரிவு தொடர்பாகப் பேசியதுடன், அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.