பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பத்தில் தேவையற்ற கேள்விகளைக் கேட்டிருப்பதால் விவாதம் உருவாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பள்ளிகளில் அனுமதி பெறுவதற்கான புதிய விண்ணப்பங்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான கேள்விகளுக்கு, விண்ணப்பிக்கும் மாணவர்கள் பதிலளிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, மாணவரின் பெற்றோர் தூய்மையற்ற வேலையில் ஈடுபடுகிறார்களா? அவர்களின் ஆதார் எண்கள், கல்வித்தகுதி, வரி செலுத்துகிறார்களா? சாத, மத விவரங்கள், மாணவர் ஏதேனும் மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா? வங்கிக்கணக்கு இருப்பின் அதன் விவரங்கள் என கேட்கப்பட்டுள்ளது விவாதத்திற்கு உள்ளாகியது.
ஹரியானா மாநிலத்தில் பாஜகவின் மனோகர் லால் கட்டார் ஆட்சி நடத்துகிறார். அவரது ஆட்சியின் இன மற்றும் மத கட்டமைப்பை வளர்க்கும் நோக்கமே இது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் ரந்தீப் சிங் சர்ஜீவாலா, ‘கட்டார் அரசு மீண்டும் இந்தத் தவறைச் செய்கிறது. பெற்றோர் தூய்மையான வேலை பார்க்கிறார்களா என்பதைத் தெரிந்துகொண்டு, மாணவர்களுக்கு தீண்டத்தகாதவர்கள் முத்திரை குத்துவதா? பெற்றோரின் தனிப்பட்ட விவரங்களை பள்ளி விண்ணப்பத்தில் கேட்டிருப்பது பைத்தியக்காரத் தனம்; அபத்தமானதும் கூட.. இதற்காக கட்டார் அரசு மாணவர்களிடமும், பெற்றோரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.