Skip to main content

தற்கொலை மிரட்டல் விடுத்த பொதுப்பணித்துறையினர்; புதுச்சேரியில் பரபரப்பு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

puducherry public works department job permanent incident 

 

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் வவூச்சர் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 1,311 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்து தீயணைப்பு நிலையம் அருகே உள்ள குடோனில் அடைத்தனர். பின்னர் மதியம் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த முதலமைச்சர் தொகுதியை சேர்ந்த 700 பேர் மருத்துவமனை மேல் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தியதையடுத்து அன்றே பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் ஆணை வெளியிட்டார். அதேபோல் அனைத்து தொகுதியில் பணிபுரியும் பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், தனது தொகுதி ஊழியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்தும் சோனாம்பாளையம் பகுதியில் உள்ள 80 அடி உயர் நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறிய 100 பேரும் அதன் கீழே சாலையில் 100 பேரும் என கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊழியர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதனை ஏற்க மறுத்து வாட்டர் டேங்க் மேலே நின்று ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு இருந்தனர். இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தும், விரட்டிப் பிடித்தும்,  போராட்டக்காரர்களை தரதரவென்று இழுத்துச் சென்றனர். மேலும் கைதுக்கு பயந்து ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் போராட்டக் களமே சிறிது நேரத்தில் போர்க்களமாக மாறியது.

 

puducherry public works department job permanent incident 

அதேசமயம் நீர்த்தேக்க தொட்டியின் மீது இருந்த ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், நேரு, அனிபால் கென்னடி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து 2 மணி நேரமாக நீர்த்தேக்க தொட்டியின் மீது போராட்டம் நடத்தியவர்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தனர். பொதுப்பணித்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக சோனாம்பாளையம் பகுதியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்