நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (14/09/2020) கூடியது.
இதில், மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மாநிலங்களவையின் ஒவ்வொரு உறுப்பினரும் ஹரிவன்ஸ் நாராயண் சிங் மீது மரியாதை வைத்துள்ளனர். ஹரிவன்ஸ் நாராயண் சிங்கின் சார்பற்று செயல்படும் தன்மை நமது ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது. கிரிக்கெட் போட்டியில் நடுவர்தான் முக்கியமானவர். அதுபோல் இங்கு சபாநாயகருக்கு முக்கியப் பொறுப்புள்ளது. ஹரிவன்ஸ் தனது பொறுப்புகளை இரண்டு ஆண்டுகள் சிறப்பாகச் செய்தார். கூட்டத்தொடரை திறம்பட நடத்தினார். நாடாளுமன்றக் கூட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மாநிலங்களவை தலைவர், துணைத் தலைவருக்கு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.