10 ஆண்டுகளுக்கு முன் 100 சதவீதம் என்ற வெற்றி வீதத்தை டெல்லியில் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி இன்று ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகர், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஒரு இடம் இன்று காங்கிரஸ் கட்சியை தோல்வியடைய செய்ய என்ன காரணம்?
நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை ருசித்த பாஜக குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, டாமன் மற்றும் டையூ, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது.
இதில் கவனிக்கத்தக்க ஒரு தொகுதி நமது நாட்டின் தலைநகரான டெல்லி. 2009 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றை கூட வெல்லாத பாஜக 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் 7 க்கு 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 2009 ல் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பாஜக வின் செல்வாக்கு அபரிமிதமாக வளர்ந்தது. அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சரிந்தது. இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது 2012 ல் 'ஆம் ஆத்மீ' கட்சியின் வருகை.
ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம் கட்சியாக மாறி அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை தீவிரமாக எதிர்த்து. இதனையடுத்து பல குற்றச்சாட்டுகளில் சிக்கி தவித்து வந்த காங்கிரஸ் கட்சியானது, பாஜக, ஆம் ஆத்மீ என இரு கட்சிகளின் சூறாவளி பிரச்சாரங்களுக்கு நடுவே தனது வாக்கு வங்கியை இழக்க தொடங்கியது. காங்கிரஸ் இழந்த வாக்குகள் ஆம் ஆத்மீ மற்றும் பாஜக வுக்கு செல்லும் என்ற நிலையில், அப்போது வீசிய மோடி அலை அந்த வாக்குகளை பாஜக பக்கமாக இழுத்து சென்றது. இதனையடுத்து 2009 தேர்தலில் 7 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சியை 2014 ல் அனைத்து தொகுதிகளிலும் தோற்கடித்தது பாஜக.
அதன் பின் தற்போது நடந்த தேர்தலில் பாஜகவை எதிர்க்க கூட்டணி சேர்வது என முடிவெடுத்தது காங்கிரஸ் மட்டும் ஆம் ஆத்மீ. ஆம் ஆத்மீ தலைமையிலான அரசு டெல்லியில் பதவியேற்றது முதல் தொடர்ந்து பாஜக வுடன் மோதல் போக்கை மேற்கொன்று வந்தது. எனவே பாஜக வை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் இணைய முடிவெடுத்தது. பல கட்ட பேச்சு வார்த்தை நடந்த பிறகும் சீட் ஒதுக்கீட்டில் முடிவு எட்டப்படாததால் இரண்டு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது. அதே நேரம் பாஜகவும் தனித்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்தது.
கண்டிப்பாக வெல்வோம் என்ற தொகுதிகளில் மூத்த தலைவர்களையும், வெற்றி வாய்ப்பு கடினமாக உள்ள தொகுதிகளில் மக்களை ஈர்க்க பிரபலங்களை வேட்பாளராக நிறுத்துவது எனவும் பாஜக சிறப்பான தேர்தல் யுத்திகளை கையாண்டது. இதன் பலன் அவர்களுக்கு இந்த தேர்தலின் முடிவில் தெரிந்தது.
கடந்த முறை 46 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக இந்த முறை 56 சதவீத வாக்குகளை பெற்றது. அதே நேரம் காங்கிரஸ் வெறும் 22 சதவீதமும், ஆம் ஆத்மீ 18 சதவீத வாக்குகளுமே பெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விக்கான முக்கிய காரணமாக, கூட்டணி முடிவில் நிலைபாடாற்ற தன்மை, தொகுதிக்கு ஏற்ப வியூகங்கள் வகுக்காமை ஆகியவை அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.