
மதுரை - திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுமார் 600 கோடி மதிப்பீட்டில் நத்தம் பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதாவது மதுரை தல்லாக்குளம் பகுதியில் இருந்து ஊமச்சிகுளம் என்ற பகுதி வரை 7 கி.மீ. வரை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தில் இன்று (20.03.2025) லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண்டிருந்தது.
அச்சமயத்தில் பின்னால் வந்த கார் லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த காரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் மதுரையில் உள்ள அழகர் கோயிலுக்கு செல்வதற்காக காரில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியதாக போலீசார் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த பாலம் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதே விபத்திற்குக் காரணம் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.