Skip to main content

கள்ளநோட்டு புழக்கம்; பின்னணியில் அரசியல் புள்ளிகள் - காத்திருக்கும் போலீஸ்!

Published on 20/03/2025 | Edited on 20/03/2025

 

Gang arrested for circulating counterfeit notes in Ettayapuram market

தென் மாவட்டத்தில் புகழ் பெற்றது எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் இந்த சந்தைக்கு ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  விவசாயிகளும் வியாபாரிகளும் ஆயிரக்கணக்கில் வருகை தருவது வழக்கம். ஆட்டுச்சந்தைச் சனிக்கிழமை கூடும் என்றாலும் வெள்ளிக்கிழமை மாலை முதலே விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து விடுவதால் எட்டயபுரம் சந்தை பரபரப்பாக காணப்படும்.  

இந்நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில்  ஆட்டுச்சந்தையில் அருப்புக்கோட்டை புலிக்குறிச்சியை சேர்ந்த விவசாயி பொன் வேலன் என்பவரிடம் 3 நபர்கள் கூட்டாக வந்து 2 வெள்ளாடு வாங்கியுள்ளனர். விவசாயி பொன் வேலன் சொன்ன விலைக்கு மறு பேச்சு இல்லாமல் எந்தவித பேரமும் பேசாமல் 19 ஆயிரம் ரூபாயை புத்தம் புது 500 ரூபாய் நோட்டுக்களாக கொடுத்துள்ளனர். 13 ஆயிரம் ரூபாய்க்கு விலை போக வேண்டிய ஆடுகள் 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான போதிலும் அரைகுறை வெளிச்சத்தில் பணத்தை வாங்கிக் கொண்ட விவசாயி பொன் வேலனுக்கு மனதில் ஒரு சின்ன சந்தேகம் ஏற்படவே உஷார் அடைந்து ஆட்டுச் சந்தையின் நுழைவு வாயிலில் இருந்த  குத்தகைதாரர்களிடம் பணத்தைக் கொடுத்து பரிசோதித்துள்ளார். 

அந்த 500 ரூபாய் நோட்டுகளில் கலர் கொஞ்சம் வித்தியாசம் தெரியவே எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அதிகாலை 4 மணிக்கு காவலர் மாரியப்பன்  துரிதமாக செயல்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவலை பரிமாறியுள்ளார். விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன்,  எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, எஸ்.ஐ. மாதவராஜா, போலீஸ் ஜாய்சன் நவதாஸ் அடங்கிய  போலீஸ் டீம் ஆட்டுச் சந்தைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த   வெம்பக்கோட்டை மாரிமுத்து (35) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதைக் கண்ட கள்ள நோட்டு கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். 

Gang arrested for circulating counterfeit notes in Ettayapuram market

பிடிபட்ட நபர் அளித்த தகவலின் பேரில் பின் தொடர்ந்து சென்ற எட்டயபுரம் தனிப்படை போலீஸ் டீம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, சாத்தூர், கோட்டைபட்டி, விஜய கரிசல் குளம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்த சந்திரன் 30, சுப்புராஜ் 40, அழகர்சாமி 40, முனியன் 36, காளிமுத்து 36 ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Gang arrested for circulating counterfeit notes in Ettayapuram market

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் என்பதும், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் மூலம் மதுரையில் கள்ள நோட்டுகளை வாங்கி இருப்பதும், கள்ள நோட்டுகளை தமிழ்நாடு முழுவதும் ஆடு, மாடு சந்தைகளில், டாஸ்மாக் கடைகளில் புழக்கத்தில் விட்டிருப்பதும், மும்பையை சேர்ந்தவர்கள் மூளையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் இருந்து புத்தம் புது 500 ரூபாய் நோட்டுகள் 160, மொத்தம்  ரூபாய் 80 ஆயிரத்தை  எட்டயபுரம் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் கள்ள நோட்டு கும்பலின் நெட்வொர்க் பல வடமாநிலங்களுக்குள் நுழைவதாலும் இதன் பின்னணியில் அரசியல் புள்ளிகள் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளதால் ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்த  எட்டயபுரம் போலீசார், கள்ள நோட்டு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென கடிதம் அனுப்பி விட்டு தலைமையின் உத்தரவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

செய்தியாளர் - மூர்த்தி

சார்ந்த செய்திகள்