ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் எனவும், இதன் விலை 1,000 ரூபாய் என்ற அளவில் இருக்கும் எனவும் சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதற்கான தடுப்பூசி கண்டறியும் பணிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்து நாட்டில் அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஒன்று சோதனைகளை எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுத்துள்ளது. இந்தத் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திச் செய்யப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைவில் இந்தத் தடுப்பு மருந்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மருந்தினை இந்தியாவில் உற்பத்தி செய்ய உரிமம் பெற்றுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம், தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், விலையைப் பொறுத்தவரை இந்தத் தடுப்பூசி ரூ.1,000 என்ற அளவில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் 100 கோடி ‘டோஸ்’ அளவுக்கு இதனைத் தயாரித்து, விற்பனை செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.