மேற்கு வங்கத்தில் வருகிற மார்ச் 27 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரபரப்பாக இருந்து வந்த தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்தநிலையில் மேற்கு வங்க முதல்வரின் தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றி வரும் பிரசாந்த் கிஷோர், அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்றால், தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் தொழிலையே விட்டுவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர், பாஜக மேற்கு வங்கத்தில் 100 சீட்டுகளுக்கு மேல் வென்றால், நான் இந்த தொழிலையே விட்டுவிடுகிறேன். ஐ-பேக்கையும் விட்டுவிடுகிறேன். நான் வேறு எதாவது தொழில் செய்வேன். இந்த வேலையைச் செய்யமாட்டேன். நான் வேறு ஒரு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதை நீங்கள் காணமாட்டீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.