கர்நாடகா மாநிலத்தில் மணக்கோலத்தில் மயங்கி விழுந்து பின்னர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை, அத்தகைய துயரத்திற்கு இடையிலும் தானமாக அளித்துப் பாராட்டுதலைப் பெற்றிருக்கிறார் அவரது பெற்றோர்.
இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக மாநில அமைச்சர் சுதாகர், கோலார் மாவட்டத்தில் சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான சைத்ரா என்ற பெண்ணின் திருமண வரவேற்பில் இந்த சோக நிகழ்வு நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சைத்ரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இதயத்தை நொறுக்கும் இந்த துயரத்திற்கு இடையிலும் மகளின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்க முன்வந்ததாக அமைச்சர் சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் வலி எங்களோடு போகட்டும், தானம் பெறுவோரின் வாழ்வு சிறக்கட்டும் என்று எண்ணிய பெற்றோரை பலரும் பாராட்டி வருகின்றனர்.