
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முந்தினம் (25.03.2025) டெல்லி சென்றிருந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த 2023இல் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. அப்போது, இனி எப்போதும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறினர். இருப்பினும் பாஜகவோடு அதிமுக கூட்டணி சேரும் என்று தகவல் பரவி வந்த வண்ணம் இருந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''அதிமுகவை பொறுத்தவரையில், கூட்டணி அமைக்கும் போது அனைத்து செய்தியாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்து அது குறித்துத் தெரிவிக்கப்படும். அதைப்பற்றி பத்திரிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். அதிமுகவை பொறுத்த வரைக்கும் திமுகவை வீழ்த்த வேண்டும். அது தான் ஒரே குறிக்கோள். மக்கள் விரோத திமுக ஆட்சியைத் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதற்காக அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பேசினார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுகின்ற சர்தார் வல்லபாய் படேல் உடைய மறுவடிவம் என பார்க்கப்படுகின்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நம் தாய் தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசி இருப்பது அவரவர் பார்வையில் அவரவர் விருப்பத்திற்கு வேண்டுமானால் கருத்துச் சொல்லலாம். ஆனால் ஒட்டுமொத்த உலகப் பார்வையில் தமிழ் இனத்தின் நலனுக்காக அவர் முன் வைத்திருக்கும் கோரிக்கைகளை தமிழ்நாட்டில் மக்களிடம் எடுத்துச் செல்வது நம் கடமை. இருமொழிக் கொள்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது நடக்க வேண்டும் என்றும்'' என பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக ஆர்.பி.உதயகுமார் பட்டியலிட்டுள்ளார்.