கர்நாடகா மாநிலம், ஆந்த்ரஹள்ளி பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், ஆந்த்ரஹள்ளி பகுதியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்குப் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்பாக இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்தது. அதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளை நாம் தவறாகப் பயன்படுத்தக்கூடாது” என்று கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களைப் பள்ளிக் கழிவறை மற்றும் கழிவறைத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.