இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்ததாக காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
12 மாநிலங்களவை உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டுவர, அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு 12 உறுப்பினர்களும் இடைநீக்கம் செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், 12 மாநிலங்களவை உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் கூட்டாகக் கண்டித்தனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றாக வெளியிட்ட அறிக்கையில், "மாநிலங்களவையின் அனைத்து நடைமுறை விதிகளையும் மீறி 12 உறுப்பினர்களை நியாயமற்ற முறையிலும் ஜனநாயக விரோதமாகவும் இடைநீக்கம் செய்ததை ஒன்றுபடக் கண்டிக்கிறோம்" என தெரிவித்திருந்தனர்.
மேலும் தங்களது அறிக்கையில், "முந்தைய அமர்வில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முன்னெப்போதும் இல்லாதது மற்றும் மாநிலங்களவையின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளை மீறுகிறது" என தெரிவித்திருந்த எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று ஆலோசிக்கப்படும் என அறிவித்தனர்.
இதற்கிடையே, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் மன்னிப்பு கோரினால், அவர்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூடி, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை சபாநாயகரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "(12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில்) மன்னிப்பு கேட்பது குறித்த கேள்வியே எழவில்லை. சபை விதிகளுக்கு எதிராக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பது போன்றது" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.