நிதி ஆயோக்கின் 6வது ஆட்சிகுழுக் கூட்டம் இன்று (20.02.2021) பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் கலந்துகொண்டனர். ஜம்மு காஷ்மீரிலிருந்து பிரிந்த லடாக், முதன்முதலாக நிதி ஆயோக்கில் கலந்துகொண்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா திட்டத்தில் பங்கேற்க தனியார் துறைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு;
“நாம் ஒரு அரசாங்கமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தில் பங்கேற்க, தனியார் துறைக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மத்திய அரசும் மாநிலங்களும் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச் செல்வதும், கூட்டாட்சித்துவத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குவதுமே இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளம். மாநிலங்களிடையே மட்டுமல்லாமல், மாவட்டங்களிடையேயும் கூட்டாட்சித்துவத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
கரோனா காலகட்டத்தில், மத்திய அரசும், மாநிலங்களும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டன என்பதைக் கண்டோம், தேசம் வெற்றி பெற்றதோடு, இந்தியாவின் ஒரு நல்ல பிம்பம் முழு உலகத்திற்கும் முன்பாக எழுப்பப்பட்டது. இன்று, நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது, இந்த ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெறுவது இன்னும் குறிப்பிடத்தக்கதாகிறது. கடந்த சில ஆண்டுகளில், வங்கிக் கணக்குகள் தொடங்குவது, தடுப்பூசி மற்றும் சுகாதார வசதிகளின் அதிகரிப்பு, இலவச மின்சார இணைப்பு, ஏழைகளை மேம்படுத்துவதற்கான இலவச எரிவாயு போன்றவை மக்களின் வாழ்வில் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை காண்கிறோம்.
இந்த ஆண்டு பட்ஜெட் திட்டத்திற்குக் கிடைத்த நேர்மறையான வரவேற்பு தேசத்தின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. வேகமாக முன்னேற விரும்புகிறேன், நேரத்தை இழக்க விரும்பவில்லை என நாடு உறுதிகொண்டுள்ளது. தேசத்தின் மனநிலையை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.”
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.