Skip to main content

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

OPPOSITE MP'S MEET

 

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.

 

“நாடாளுமன்றம் செயல்படுவதற்கு, பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் ஆகிய இருவரில் ஒருவர் அவையில் இருக்கும்போது, பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்" என காங்கிரஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

 

இந்தசூழலில், நேற்று (27.07.2021) எதிர்க்கட்சி எம்.பிக்களின் கூட்டம், நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே உள்ளிட்டவர்களும், பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டுக் கட்சி, கேரள காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், பெகாசஸ் விவகாரத்தில் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ராகுல் காந்தி, திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலே ஆகியோர் உட்பட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற அவைகளில் பல்வேறு விவகாரங்களை எழுப்புவது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்