தாயைப் பிரிந்த குட்டி யானை, தாயைத் தேடி அலையும் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் நீலகிரியில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையுடன் காட்டு வழியில் பொடி நடை போட்டுக் கொண்டு நடந்து செல்லும் வீடியோக்களை யாரும் மறந்திருக்க முடியாது. தாயுடன் சேர்க்கப் படாத பாடுபட்ட அந்த நிகழ்வு செய்திகளாக வெளியாகி சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்திருந்தது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் அஸ்ஸாமில் நிகழ்ந்துள்ளது. ஆனால் நீலகிரியில் நிகழ்ந்திருந்த சம்பவத்திற்கு நேர் எதிராக நடந்தது தான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.
காரணம் தாய் யானையைப் பிரிந்த யானை குட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் விரட்டியடிக்கும் அந்தக் காட்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி தேயிலைத் தோட்டத்தில் தாய் யானையைப் பிரிந்த குட்டி யானை தோட்டத்திற்குள் வந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், அதன் நிலையைப் புரிந்து கொள்ளாமல் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அதை மிகவும் மூர்க்கத்தனமாக சத்தமிட்டு விரட்டினர். கற்களைக் கொண்டு தாக்கியதால் அந்தக் குட்டி யானை தலைதெறிக்க சத்தமிட்டுக்கொண்டே ஓடியது. யானை குட்டி ஒன்று அம்மாவைத் தேடி அலைவதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர் ஒருவர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு 'குட்டி யானையின் உணர்வை புரிந்து கொள்ளாத மக்கள்' எனப் பதிவிட்டுள்ளார். மேலும் 'அம்மாவை தேடி அலையும் பரிதாப நேரத்தில் கூட அதனைக் கடுமையாக விரட்டியடித்தனர். மனிதன் பூமியின் மிகக் கொடூரமான உயிரினம்' எனத் தன்னுடைய பதிவில் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
'மனிதர்கள் தங்களுடைய மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது' எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.