நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன் தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், மொத்தம் 7 மக்களவைத் தொகுதி கொண்ட டெல்லியில் ஒரே கட்டமாக மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் ஹர்ஷ் மல்கோத்ரா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து லஷ்மி நகரில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “சச்சின் டெண்டுல்கரிடம் ஏன் இரட்டை மற்றும் மூன்று சதங்கள் அடித்தார் என்று கேட்பீர்களா? கடந்த மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்ற போது ராமர் கோவில் கட்டப்பட்டது. இப்போது, 400 இடங்கள் கிடைத்தால், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் கிருஷ்ணர் கோவில் கட்டப்படும். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குப் பதிலாக பாபா விஸ்வநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரமாண்ட கோவிலைக் கட்டுவோம். முகலாயர்களால் பரப்பப்பட்ட குழப்பத்தை நாமும் சுத்தம் செய்ய முடியும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஒரு காஷ்மீர் இந்தியாவிலும் மற்றொன்று பாகிஸ்தானிலும் உள்ளது என்று கூறினோம். பாகிஸ்தானுக்கு ‘ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ உள்ளது என்று நமது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஒவ்வொரு நாளும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும், மக்கள் தங்கள் கைகளில் இந்திய மூவர்ணத்தைப் பிடித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மோடிக்கு 400 இடங்கள் கிடைத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை இந்தியாவிற்கு கொண்டு வருவோம். 400 இடங்கள் கொண்ட எங்கள் திட்டங்களின் பட்டியலை நான் தொடர்ந்தால், காங்கிரஸ் ஐ.சி.யூவை அடையும்” என்று கூறினார்.