புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் யுவராஜ். இவரது உறவினர் ஒருவர் தனது பூர்வீக நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, தனது நிலத்தை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி யுவராஜிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஏற்கனவே அகற்ற முயன்று பிரச்சனை வந்ததால் மீண்டும் நேற்று நீதிமன்ற ஊழியர் வெங்கட், சர்வேயர், மின் துறை, காவல்துறையினருடன் அங்கு சென்று நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்து ஆக்கிரமிப்புகளை இடிக்க தொடங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் நக்கீரன், அவரது மனைவி சுதா மற்றும் குடும்பத்தினர் நீதிமன்ற ஊழியர் வெங்கட்டிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று சுதா, தனது கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு வீடுகளை இடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பு பிணையில் வெளியே விட்டனர்.