நாட்டுக்கு இப்போதைய தேவை 3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலையோ, தேசிய குடியுரிமை பதிவேடோ இல்லை. வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் படிக்காத குழந்தைகளின் பட்டியலைத்தான் அரசு தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
குடியுரிமைச் சட்டத்திற்கும், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ், “இந்த போராட்டங்களை வன்முறையாக்க மத்திய அரசு விரும்பினாலும், போராட்டக்காரர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். நரேந்திரமோடியின் கல்வித் தகுதி கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் இன்றைய இளைஞர்கள் அவருக்கு அரசியல் அறிவியல் பாடம் எடுக்கிறார்கள். நிச்சயமாக இதிலாவது அவர் ஒரு பட்டம் பெறுவார். அசாமில் கார்கில் போர் ஹீரோ ஒருவருக்கே குடியுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அவர் முஸ்லிம் என்பதால் மட்டுமே இது நடந்திருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.