!['No ban on name India'-Supreme Court's plan](http://image.nakkheeran.in/cdn/farfuture/O6BX5NwWB6u2IwBk6ceuJE-cJbhAOtrMf2LnjEZxHyI/1691753512/sites/default/files/inline-images/A761_4.jpg)
அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். பல கட்டங்களாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து 26 எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கொடுத்த பரிந்துரையின் பேரில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி (INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) என்பதன் சுருக்கமே (INDIA) இந்தியா என எதிர்க்கட்சிகள் விளக்கமளித்திருந்தன.
இந்நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்ற பெயரை வைக்கக்கூடாது. எனவே இந்த பெயரிலான கூட்டணிக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 'இந்தியா' எனப் பெயர் வைக்கத் தடை இல்லை எனத் திட்டவட்டமாகக் கருத்து தெரிவித்ததோடு, பொதுநல மனுத் தாக்கல் செய்த மனுதாரருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. விளம்பரத்திற்காக இந்த மனு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தது.