அரபிக் கடலில் உருவான ‘நிசர்கா’ புயல் மஹாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தொடக்கமாக அமைந்த நிசர்கா புயல் குஜராத்தை நோக்கி செல்லலாம் என முதலில் கணிக்கப்பட்ட நிலையில், பின்னர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மதியம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் அலிபாக் அருகே கரையை கடந்தது. கடத்த 129 ஆண்டுகளில் மஹாராஷ்ட்ரா மாநிலம் சந்தித்த முதல் வெப்பமண்டல ஜூன் மாத புயலான இது, அம்மாநில கடற்கரை பகுதிகளை புரட்டிபோட்டுள்ளது. மணிக்கு 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை வீசிய பலத்த காற்று மரங்கள், மின்கம்பங்கள், வீட்டுக்கூரைகள் ஆகியவற்றை முழுவதும் நாசப்படுத்தியது. மேலும், இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மும்பை விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இப்புயலினால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என இதுவரை தகவல் வெளிவராத நிலையில், சேதங்கள் குறித்து மதிப்பீடுகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.