சமீபத்தில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது அதனுடைய தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமையான பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்து ஆட்சி நடத்து வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு லட்சக்கணக்கான கடிதங்களை எழுதி கேள்வி எழுப்ப வேண்டும் என்று பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ‘2024 திருடப்பட்ட தீர்ப்பு’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து பரகலா பிரபாகர் கூறியதாவது, “7 தொகுதிகளுக்கு 7 கட்டத் தேர்தல் நடந்தது. ஆனால், 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டத் தேர்தல் நடந்தது. இது ஏன் எனக் கேட்க வேண்டும். மேலும், 14 தொகுதிகளுக்கு 3 கட்டத் தேர்தல் நடத்தப்பட்டது ஏன்?. சில மாநிலங்களில் 12% வாக்குகள் எப்படி வந்தது? குடியரசுத் தலைவருக்கு லட்சக்கணக்கான கடிதங்கள் எழுதி, தேர்தல் ஆணையம் குறித்து கேட்க வேண்டும்” எனக் கூறினார்.