இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 16 முதல், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று (21.06.2021) ஒரேநாளில் 82.7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். தடுப்பூசிதான் கரோனாவை எதிர்கொள்ள நம்மிடம் உள்ள பேராயுதம்" என்று தெரிவித்துள்ளார்.