இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் புகைப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டுமென்ற குரல்கள் நீண்ட நாட்களாகவே எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நேதாஜியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "தேசிய உணர்வை உருவாக்கியதில் நேதாஜியின் பங்கு ஈடு இணையற்றது. அவரது தியாகத்தையும், போராடியவர்களின் தியாகத்தையும் யாரும் புறக்கணித்துவிட முடியாது. வரும் தலைமுறையினர் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் நமது தேசத்தின் வரலாறு மீண்டும், மீண்டும் சொல்லப்பட வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
மேலும், நீதித்துறை தடைகள் காரணமாக, தங்களால் மனுதாரரின் கோரிக்கையை அமல்படுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க முடியாதெனக் கூறிய நீதிபதிகள், இதுகுறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் பதிலளித்துள்ள மத்திய அரசு, ரூபாய் நோட்டுகளில் வேறு இந்தியத் தலைவர்களை இடம்பெறச் செய்வது குறித்து 2010 ஆம் ஆண்டு குழு அமைத்து பரிசீலிக்கப்பட்டதாகவும், வேறு தலைவர்களின் புகைப்படத்தை அச்சிட்டால் சாதி மத சாயம் பூசப்பட்டுவிடும் என்பதால், மகாத்மா காந்தியின் படத்தைத் தவிர வேறு தலைவரின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் அச்சிட முடியாது என அந்த குழு பரிந்துரைத்ததாகவும் கூறியதோடு, ரூபாய் நோட்டில் வேறு யாருடைய படத்தையும் அச்சிட இயலாது எனவும் தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நேதாஜியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.