
இந்தியாவில் குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் குறிப்பிட்ட 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சி என சர்ச்சை எழுந்தது. இதன்தொடர்ச்சியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தது. அதில் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் குறுக்குவழியில் அமல்படுத்தும் வகையில் இருப்பதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறும் வகையில் உள்ளதாகவும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மனுவிற்கெதிராக மத்திய அரசு பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் அந்த அறிவிப்பிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற அறிவிப்புகள் இதற்கு முன்பே பலமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.